Saturday, December 15, 2018

நீ அல்லவா தாய்




பூக்களின் நிழலுக்குள்
ஒழிந்து கொள்ளும்
வண்டு போல்!

என் முந்தானைத்
திரைக்குள்ளே
முகம் புதைக்கும்
அரும்பே!

கருத்தரித்ததும்,
கத்தரிப் பிஞ்சு
வெறுத்தது,
பப்பாளி ஆகாது,
பசரிக்கு குளிர் கூடும்,
தக்காளி தின்றாலோ,
தங்க மகவுக்கு உடல்
கரையும்!

மீனுக்கு தரம் பிரிச்சு
ஆடைக்கு அகலம்
வச்சு.......
கூடவே காவல் வச்சு
பத்து மாதமும்
பல்லாயிரம்
நிமிடங்களையும் கடந்து!

இடுப்பு வலிக்க,
நடை தளர....
இதயம் சற்று அதிகமாய்த்
துடிக்க!
இத்தனையும் அவள்
கடக்க!

தான் பெறக் காத்திருக்கும்
மழலைக்கு பெயர்
வகுத்து, பொருள்
தெரித்து.......
கண்ணாலும்,
மனதாலும், உருவமைத்து!

மல்லார்ந்து படுக்க
மூச்சுமுட்டும்,
குப்பறப் படுத்தா கொஞ்சம் சுகமும்
கிட்டுமா என்று!

பானைக்குள்
ஊற்றிய நீருக்கு
தீயிட ......
பானையிலும்
நில்லாது நீரிலும் அடங்காது உலையில்
கொதித்தெழுந்து
உடையும் நீர்க் குமிழ் போல் அவள் துடிக்க!

அன்னா எட்டிப் பார்க்கும்
பிரசவம் என்று தன்னைத்தேற்றிக்
காலம் தள்ள!

தீயில பட்ட வைக்கோல்
சாம்பலாகி ஊருரிலே மிச்சம் இன்றி
உறைவதுபோல்.....
அவள் மூச்சு கடு கடுக்க!

இத்தனையும் கடந்து,
ஒருசில மணி நேரங்கள்
தன் தசை இறுக.....
தலை விறைக்க.....
மூச்சுக்குள்
அணல் வீச.....
அடி வயிறு விரு விருக்க
அந்தரம்தான் அவளுக்கு!

ஆண்டவனை அருகிருந்தால்,
ஏன்ற வரை குதறியிருப்பாள்,
ஈன்ற சுகம் அறிந்ததுண்டா.....
ஈடு இல்லை எதுவும்!

உலகம் எதிரியாகும்,
கணவன் எதிர்க் கட்சிக்காரன் போல்
தோன்றும்.....
விசமிருந்தால் விடுதலை பெறலாம்
என்று கூறும் மனம்!

தாதியோ, அங்கும் இங்கும் நடவென்பாள்....
கால்களோ உணர்சியை
சிலுவையில் ஏற்றி விட்டு இறந்து கிடக்கும்!

அடி வயிறு மட்டும்
போர் தொடுக்கும்,
கண்ணீருக்கே
கண்ணீர் வரும்.....
உன் பெண்மை
உயிர் விளிம்பை
விட்டு விடுவதா.....
பற்றிப் பிடிப்பதா ....
என்று அல்லோலப்படும்!

உலகமே விடியலில்
வியாபித்திருக்கும்
ஆனால் உனக்கு மட்டும்,
அந்த ஒரு சில
மணி நேரங்கள்
விழிகளால் இருண்டு கிடக்கும்!


பெறுவதா அடி
வயிற்றைக் கிழித்து
எடுப்பதா என்ற தர்க்கம்
வரும்!

தாயோட சேயும்
நோயின்றி வந்தால்
போதும் வாயால் இழுத்தெடுங்கள்.....
வயிற்றையேனும்
கழித்து எடுங்கள்
பேதை துயர் பொறுக்குதில்லை
என்று உறவுகள் மன்றாடும்.......
இறையாளனை கூவி
அழைக்கும்!

எது நடந்தாலும்
எவர் துடித்தாலும்
சுமை இறக்க நீ மட்டுமே
துடிப்பாய்!

சாவை வாவென்று
அழைப்பாய்.....
இத்தனையும் கடந்து
ஈன்றெடுத்த மகவை
மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் நினைவுக்குள்
ஓரமாய் நினைத்துப்
பார்ப்பாய் .......

நீ......

அல்லவா தாய்!

No comments:

Post a Comment