Sunday, April 28, 2019

கல்லறையில் ஒரு முறை

என்னவென்று எண்ணிப் பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை என்று
இதயமே இடிந்து போகிறது
இருப்பினும் சில இதயங்கள் கண்டு
வியர்ந்து போகிறேன்!

பட்டிலே உடுத்து பகட்டிலே வாழ்ந்தவர்
கல்லறை கண்டேன்
பட்டினியால் கிடந்து கந்தையைக்
கசக்கிக் கட்டியோர் கல்லறையும்
கண்டேன்!

பூமியில் பூசிய வாசனை என்ன
பொறுமையில் பொருத்திய
தீப் பொறி என்ன பார்வையில் எரித்திடும் கோபங்கள் என்ன
அத்தனையும் ஆறடிக் குழிக்குள்ளே
அவஸ்தையில் திணறுதல் கண்டேன்!

நிமிர்ந்த நடையில் பரந்த திமிறும்
பசித்த வயிறை மறந்த மனமும்
தொழுகை தன்னை வெறுத்த மனுவும்
இடிந்த குழியில் இருப்பதைக் கண்டேன்!

பதவி என்னும் பொறுப்பைக் கொண்டு
நல்லவை கெட்டவை அளந்த கைகள்
அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து கிடப்பதைக்
கண்டேன்!

கொடையினை கொடுக்க மறந்து
கோமளத்தில் சாவியைத் தொங்க
விட்டு கோபுரத் தட்டினில் நின்று குடிசையின் உடைசல் கண்டு
மகிழ்தோரும் அங்குதான் வாழக் கண்டேன்!

மனிதனில் தரம் பிரித்து பந்தியை
சந்தில் வைத்து பாகு பாடு கொண்டு
வாழ்ந்த பணக்கார பதறுகளும்
அங்குதான் அடங்கக் கண்டேன்!

ஏனடா மானிடா ஏகனை மறந்திட்டாய்
எம்புவி எமதல்ல இருப்பினும்
எகத்தாளமாய் வாழ்ந்தவர் ஏழையாய்
வாழ்ந்தவர் எல்லாம் சமாதியில் சமமடா
ஆன்மாவை அவன் கரம் பற்ற அடுத்தவர் உடல் புதைத்த இடத்தில் உறங்குவோர் நிலை கண்டு மாறாதோ உன் மனம்!

                                                  க. ஷியா

No comments:

Post a Comment