Monday, July 29, 2019

கொஞ்சம் ஓய்வெடுங்களேன்



சில நாட்களாக எனக்குள்
ஒரு வகை வலி
நிற்கவோ நடக்கவோ ஏன் வலியால்
வலிதாங்காது துடிக்கவோ
இயலாத இயலாமை!

என் உடலின் பாகங்களை
எலிகள் கூடி அவ்வப்போது
நறும்புவதாய் ஓர் உணர்வு
என் முதுகுப் பாகத்தில்
ஏதோ ஓர் பாரம் வந்தமர்ந்த
சோகம்!

பல தருணங்களில் என் சுவாசக் குழாயில் யாரோ நுணி விரலால்
மூடுவது போல் ஒரு திணறல்!

மாத்திரைகள் ஆகாரம் ஆகிறது
மருந்துகள் குடிபாணமாகிறது
மனதும் கொஞ்சம் மயங்கியே
சோர்கிறது!

மருத்துவமனை உறவாகிறது
மருத்துவர்கள் கூடி
உபசரிக்கின்றனர் அங்கு கசப்பு
உணவுகள் வாய் வழியும்
கடுத்து வலிக்கும் பாணங்கள்
உடல் வழியும் என்று பரிமாறப்படுகிறது
வலிப்பசியாற!

முயன்று முயன்று மீளாது முடிவில்
மருந்துகளுக்கு அடிமையாகினேன்
மருந்துகள் கூட போதைப் பொருள் போல் மணியானதும் அருந்தச் சொல்லி
அலரமடிக்கிறது உணர்வு!

நாடித்துடிப்புகளுக்கு நல்லதொரு
காவலாளி நாளுக்கு பலமுறை
வந்து கவனிக்கிறார்
நான் துடிக்கிறேன் அதனால் தான்!

கால்கள் அதீத ஆர்ப்பாட்டம்
செய்கிறது கத்தி முனையால்
சிறிதாய் ஓர் யுத்தம் செய்ய வேண்டுமாம் சில நிமிட நீடிப்பில்!

உயிருடன் ஒரு சபதம் அப்போது
நீ ஊர்கையில் உடலில் ஓர் இடத்தில் மட்டும் சில நொடிகள் உனை நிறுத்தி வைப்போம் என்று!

வெட்டி எறிந்த சதைத் துண்டுகளின்
சாபமாய் இருக்குமோ என்னவோ
விறைப்பை வென்று வலிகள்
குடி கொள்ளுவது!

ஓய்வுக்கு கூட ஒதுங்க இயலாத
நோவின் முண்டியடிப்பு
பல பக்குவங்களை கற்றுத் தந்தாலும்
கண்ணீரே பந்தயம் போட்டு ஜெய்க்கிறது!

என் உயிரின் நுன்னுயிர்கள்
என்னுடன் விளையாடியதன்
விளைவா இது அப்படியானால்
அவர்களுக்கு என் பணிவான
படிவம் ஒன்று
கொஞ்சம் ஓய்வெடுங்களேன்
நுண்ணுயிர்களே என் மென்னுடல்
வலிக்கிறது!

இந்த நேயவளின் நோய் தாளா
விண்ணப்பம் இது!

No comments:

Post a Comment