Monday, July 29, 2019

கடிதம் தந்த கண்ணீர்


எத்தனை முறை குத்திக்
கிழித்தாலும் என்னைச் சுற்றியே
கிடக்கும் சதைத் துண்டுகள்
என்னை தேற்ற வளர்ந்து
கொண்டுதான்
இருக்கிறது!

அலை மோதும் எதோ ஓர் நியாபகம்
மட்டும் அவ்வப்போது வந்து இனமறியாது வலித்து விட்டுப்
போகிறது!

ஆனாலும் காதலில் வீழ்வதில்லை
என்ற ஆணவம் கருவுற்றிருக்கிறது
என் மனக்கிடங்கில்
அதையே தொடர்ந்து அதுவான
எனக்கு காதலை ஆராதிக்கும்
பழக்கமற்றுப் போனது!

காலங்கள் என்னை
அலங்கரித்தது நானும் அணிந்து
கொண்டேன் பல போர்வைகளை!

ஓவ்வொரு போர்வைக்குள்ளும்
ஓவ்வொரு அனுபவம்
நான் காதலைக்
கண்டதுண்டு கொண்டதில்லை ஆதலால் அது மட்டும் கிடைக்கவில்லை!

திருமணக் கனவுகளை தினசரி
பேசும் என் முற்றம் அக்கோலத்தைக்
கூடத் தந்தது அணிந்து பார்த்தேன்
அவ்வலங்காரம் எனக்கென ஆனதல்ல
அவரவர்க்குத் தானே அந்தந்த அலங்காரங்கள்!

என் அனுபவப் போர்வைகள் சற்று
சாயம் போகத்துடங்கின
அதன் முதல் நூல் வரை வெளுத்தே
கலங்கின!

போர்வைகளை களைய துடித்தேன்
இது மட்டும் சற்று சதை குடைந்து
இதயத்தைக் கிள்ளியது
இதயமும் கொஞ்சம் கிளிஞ்சல் ஆனது!

முட்டி மோதி முக்குளித்து எழுந்து
நிற்க முனைகிறேன் முடியாது
போகிறது ஆறுதல் தேடி யாரிடமும்
போகத் தெரியாத எனக்கு!

பள்ளியறை தந்த நினைவுகள்
வந்து என் காயத்தில் சதையாகி
சுவர் மூடுகிறது அவன் என்னைச்
சேர முட்டி மோதி தட்டுண்டு போன
நியாபகமாய்!

கொந்தெளும் குருதி மட்டும்
வெளிவர வழியின்றி எனக்குள்
அணை உடைக்க ஆயத்தமானது
ஆனாலும் தடுப்புகள் பலமானது!

செய்வதறியாது துடிப்பது ஒன்றும்
எனக்கு புதிதல்ல செருகிய ஓலை
போல் மூலையில் ஓய்ந்து கிடந்தேன்!

அப்போது அங்ஙனம் எனைத் தழுவியது
அவன் காகிதம் காதலை அறியாத
எனக்கு காவியமானது அதுவே
காதலும் தந்தது!

ஓர்தலைக்காதலன் அவன்
ஓராயிரம் கனவுகளை வரைந்து வைத்திருந்தான் என்னோடாக!

கை நழுவிய பேரின்பம்
கை தழுவையில் நான் தான் புதைந்து
கிடக்கிறேனே வஞ்சனைச் சிறையில்
வாழ்ந்திருக்கிறது எனக்கான காதல்
வாழ மறுத்து விட்டேன்
உணரத் தொடர்கையில் நானே
கை நழுவி நின்றேன்!

                                         க.ஷியா

No comments:

Post a Comment