Sunday, April 28, 2019

கல்லறையில் ஒரு முறை

என்னவென்று எண்ணிப் பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை என்று
இதயமே இடிந்து போகிறது
இருப்பினும் சில இதயங்கள் கண்டு
வியர்ந்து போகிறேன்!

பட்டிலே உடுத்து பகட்டிலே வாழ்ந்தவர்
கல்லறை கண்டேன்
பட்டினியால் கிடந்து கந்தையைக்
கசக்கிக் கட்டியோர் கல்லறையும்
கண்டேன்!

பூமியில் பூசிய வாசனை என்ன
பொறுமையில் பொருத்திய
தீப் பொறி என்ன பார்வையில் எரித்திடும் கோபங்கள் என்ன
அத்தனையும் ஆறடிக் குழிக்குள்ளே
அவஸ்தையில் திணறுதல் கண்டேன்!

நிமிர்ந்த நடையில் பரந்த திமிறும்
பசித்த வயிறை மறந்த மனமும்
தொழுகை தன்னை வெறுத்த மனுவும்
இடிந்த குழியில் இருப்பதைக் கண்டேன்!

பதவி என்னும் பொறுப்பைக் கொண்டு
நல்லவை கெட்டவை அளந்த கைகள்
அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து கிடப்பதைக்
கண்டேன்!

கொடையினை கொடுக்க மறந்து
கோமளத்தில் சாவியைத் தொங்க
விட்டு கோபுரத் தட்டினில் நின்று குடிசையின் உடைசல் கண்டு
மகிழ்தோரும் அங்குதான் வாழக் கண்டேன்!

மனிதனில் தரம் பிரித்து பந்தியை
சந்தில் வைத்து பாகு பாடு கொண்டு
வாழ்ந்த பணக்கார பதறுகளும்
அங்குதான் அடங்கக் கண்டேன்!

ஏனடா மானிடா ஏகனை மறந்திட்டாய்
எம்புவி எமதல்ல இருப்பினும்
எகத்தாளமாய் வாழ்ந்தவர் ஏழையாய்
வாழ்ந்தவர் எல்லாம் சமாதியில் சமமடா
ஆன்மாவை அவன் கரம் பற்ற அடுத்தவர் உடல் புதைத்த இடத்தில் உறங்குவோர் நிலை கண்டு மாறாதோ உன் மனம்!

                                                  க. ஷியா

அக்கினித் தரை

தீ எனத் தீக்கிறது வெயில்
என் பாதங்கள் தீந்தே
போகிறது!

வேர்வையின் நதியில்
என் தேகங்கள் நீந்த
போர்வைகளை எடுத்தெறிந்திட
போர் தொடுத்திடும் கரம்!

சுட்டன பட்ட இடமெல்லாம் சுட்டன
அதில் இதயமும் கொஞ்சம்
பட்டன!

சிற்றெறும்புகள் சிதறாமல்
அணிவகுக்குது என் கால்களோ
சிந்தத் துடிக்கிறது சீழ்களை!

வெயில் கீறத் துடிக்குது
உயிர் தாவத் துடிக்குது
கால நிலை கூட காய்ந்து கிடக்குது!

எங்குதான் நீந்த வியர்வை
நதியில் வெந்த உடல்கள்
எங்குதான் நீந்த.....!

காற்றும் காற்றாய் இல்லையே
கவிழ்தே கொட்டுகிறது தீப் பிளம்பை!

இயற்கைக்கு என்னவாயிற்று
அவைகளை அவைகளே சுவாசிக்கத்
துடிக்குது போல!

அந்தக் கோழி இறகு எனை
உணர்ந்ததா என்ன காற்றின் சிறகில்
ஏறி வந்து என் தோள்களில்
சரமாகுது!

தோரணை போடும் வியர்வைத் துளியே
என் தேகத்தில் பதுங்காதே!

முகம் தடவும் சுருள் முடியே
இளநரை விலகுது அவள்
கூந்தலை மூடு முகம் கொஞ்சம்
இளைப்பாறட்டும்!

தென்னங் கீற்றில் வந்துரசும்
காற்றே இந்தத் தரையைக் கொஞ்சம்
தலை கோதாயோ!

அவிழ்ந்து கிடக்கும் அக்கினி கொஞ்சம்
எழுந்து பறக்கட்டும் குளிர்ந்து
சுவாசிக்க!
                                        க. ஷியா

ஒரு நிமிடம் உணர்ந்தேன்

இரத்தத் தாகமும் இல்லை
மற்றும் ஓர் நேசமும் இல்லை
இருப்பினும் ஏன் இந்த
காதல்!

பனிக்குடம் உடைத்து
பால் மடி சுரந்திட தொப்புளில்
வலித்திட நான் தொல்லைகள்
தந்ததும் இல்லை இருப்பினும்
ஏன் இந்த நேசம்!

உன் இடையில் என்னுடல்
சுமந்ததும் இல்லை
உன் தோள்களில் நான்
தாவிக் குதித்தொரு ராட்டிணம்
சுத்தவும் இல்லை இருப்பினும்
ஏன் இந்த ஆவல்!

நிலவினை உன்னுடன் ரசித்ததும்
இல்லை நிழல் என உன் விரல்
பிடித்ததும் இல்லை
இருப்பினும் ஏன் உன்னில்
எனக்கான துடிப்பு!

சிந்திக்கச் சிந்திக்க சிந்தை
மகிழுது பார் உன் அன்பில்
நனைந்தொரு நெஞ்சம்
அழுவதைப் பார்!

நேசங்கள் பாசங்கள் கருவறை
மட்டும் தருவதில்லை
நேர்மையும் நெஞ்சம் கொள்
தூய்மையும் ஆலம் முழுதும்
அள்ளித் தருமே தூய்மையே
நீ தூசில் அண்டாதிரு!
                                        க.ஷியா.

நிலா முத்தம் வேண்டும்

இந்த இரவுப் பாயில்
தினமும் தூங்கும் எனக்கு
நிலவு முத்தம் தின்ன
வேண்டும் போல்
எண்ணி!

மணலிடம் முதுகை
கொடுத்து மல்லாந்து
கண்ணெறிந்தேன்!

அங்கே தென்னங்கீற்று
துண்டு போடுகிறது நிலவை!

கன்னங்கள் எல்லாம் கீறல்
அந்த நிலவில் முத்தம் தின்னும்
ஆசை நீங்கி தென்னங்கீற்றை
முறைத்த படி மனதுக்குள்
விம்மி எழுந்து நடந்தேன்!

இந்த இரவுப் பாயில் புழுக்கம்
வந்து அமர்ந்து கொண்டு
அதன் மேல் உறங்கச் சொல்கிறது!

இப்படித்தான் இந்த இரவுக்காறி
நிலவு முத்தம் தின்னவும் விடுவதில்லை
நிறைந்த தூக்கம் தருவதும் இல்லை!

விடியப் போகும் விடியலில்
இருதயத்தில் சூரியன் சுடும்
அப்போதும் இருக்கத்தான் போகிறோம்!

க. ஷியா
இலங்கை.

போதை ஒழிப்போம் புது யுகம் படைப்போம்

சிக்கன வாழ்கையில்
சிரிக்க வைத்து சிதைக்கிறது!

அத்தனை குணங்களையும்
மறக்கடித்து சீரழிக்கிறது!

குரல் வளை அவித்து குடலினுள்
குவிந்து உடலினை துளைத்து
உருவிருக்க உனைத் தின்கிறதே
போதை!

எத்தனை கூக்குரல் எங்கெல்லாம்
விழித்திட விளம்பரங்கள்
கண் முன்னே மரணங்கள்!

கண்டு கொண்டே தொண்டு போல்
செய்கிறாயே!

தீண்டாதே உருவித்தின்கிறது உனை
மீண்டு வா மீட்டெடு காத்திருக்கிறது
புது யுகம்!
               

குரோதம் காணும் குருதி

வனாந்தரம் அமைதி காண
வையகம் ஏனோ அழுகிறது
கொய்திட்ட தலைகளை
கோர்த்து வைத்து
எய்தவை பற்றிக் கேட்போமா.....!?
எதுவென்று அறியாமல்
முளுசுமே.....!

மழலைகள் கோரச் சத்தம்
மடுவிலும் மலையிலும் சிதறி
எழுகிறதே தீங்கினை வினவி ஒரு
விடை காண்போமா.......!?
உலகின் பொருள் அறியாது தவிக்குமே....!

வல்லவன் சொல்லாச் செயல்களை
வலிந்து செய்யும் நாசர்களை
வெறுத்து விலகிடலாம்!

வஞ்சனை அறியாது வாழ்ந்த
மக்கள் நெஞ்சினைத் துளைத்து
நோவினை கொடுத்து பஞ்சு போல்
பறந்தனரே அவர்கள் உடல்கள்!

என்னென்று ஆறும் துயர்
எங்கென்று தீர்ப்பது இழப்பினை
ஏங்கித் தவிக்குது மனம்!

வஞ்சகர் செயலால் வாயில்லாப்
பூச்சிகளும் விமர்சனச் சிறையில்
புள்ளியாய் மின்னுதே
அவர்கள் எள்ளளவும் என்னாதோர்
தீவிரவாதம் தனை!

செங்குருதி கொண்ட உடல்
சுவர்களில் அப்பிக் கொள்ள
ஈனர்கள் செயலால் எங்கள் உள்ளமும்
ஏசித் தீர்க்குதே!

நாளை நாங்களும் உயிர் இழந்த
தசைகளால் சுவர் ஒட்டி ஓவியம்
ஆகலாம் அந்த ஓவியங்களை
கழுகுகள் கூட சுவை காணலாம்!

மானிட வாழ்விலே மதங்கள் பழியில்லை அதை உணர்ந்தவர்
மனதில் பகையில்லை!

கொன்றவன் சென்றவன் கண்டதுதான்
என்னவோ......!?
இருப்பவரேனும் இதை எண்ணிப் பார்க்க மறுப்பதும் ஏனோ...!?

மதங்களும் திரு மறையதும்
வாழ்வுக்கு வழியடா அதை
சினங்களுக்குச் சின்னமாக்கியது
ஏனடா!?

பேசித் தீர்க்க தீரும் பகையை நீ
ஏனோ தாக்கித் தழைக்க விடுகிறாய்
ஆறாத துயரால் அறிவிப்பு இன்றி
அழுகிறது கண்கள்!

மானுடா மனிதம் காத்திட வா.


                                                      ஷியா