Saturday, March 23, 2019

பிள்ளை



முத்தங்களைத் தொட்டு
வைத்த உன் இதழ்கள்
சத்தமின்றி உறங்குகிறது!

அதை வாங்கிக் கொண்ட
கன்னங்கள் மட்டும்
தாகத்தில் தவிக்கிறது!

பத்து விரல் இடுக்குகளும்
மொத்தமாக இறுகப் பின்னி
இழுத்தணைக்கிறாய்!


உன் செவ்விதழ்கள் கொண்டு
எனை மிச்சம் இன்றி தின்கிறாய்!

மார்பினை முட்டி உரசி
தோளினைத் தடவுகிறாய்
நான் வாடிடாக் கொடியென
ஸ்பரிசம் தடவிக் காட்டுகிறாய்!


என் அடி மடி தேடி
ஆவல் கொள்கிறாய் என் மேனியை
தினமும் கால்களால் பின்னுகிறாய்!

அப்பி வைத்த எச்சில்கள்
அழுக்காக்க அப்படியே நாவால்
எனைக் குழிப்பாட்டுகிறாய்!

மொத்த நேர தித்திப்பை எனக்கே
ஊட்டுகிறாய்
என் கோடை நதியைக் கட்டி வைத்து
நீ உருவெடுத்தாய்!

மேலாடை நகர்ந்தால் வெட்கமல்லவா
நீ என் உயிர் உறை நுழைந்து
உருவெடுத்தாய் புனிதம் தான்!


தீராத மோகங்கள் இரண்டு
மோத பாராளும் காதலுக்கு
பாங்கான பரிசாக நீ வந்தாய்!

வேண்டாத மாதுக்குள் கூட
வெகுவாக குடி புகுவாய்
வேண்டும் என்று அழுதவற்கும்
தூரம் நின்று சோதிப்பாய்
உன் தித்திப்போ திகட்டாது போ!

                                  க.ஷியா
                                 இலங்கை

வந்து விடு


வீங்கிருள் திரை தொடுக்க
கயல்களும் காத்திருக்க
கயவனே எனை களவாடி
மறைந்தாயே நெஞ்சின்
துடிப்பினை சடுகதியாக்கி
விட்டு!

குழலியில் கரு விழி மையம்
கொள்ள குமரி நான்
கதறியே உன்னை தேட
பதுமைபோல் எங்கு சென்று
அமர்ந்தாயோ
இங்கும் உனை காணேன்!

நாளிகை கூட நாவைத்
தடுக்கி ஓடுதே
நான் உனை நலம் கேட்டால்!

விடியலில் வந்து விடு
விளுங்கிய ஏக்கங்கள்
விடை பெறட்டும்!

                                        க.ஷியா.
                                        இலங்கை


புதிய பாதை



எடுத்து வைத்த கால்கல்
எல்லாம் எத்தி விட்ட காலம்
கண்டு நெற்றி விறைக்க
அழுததுண்டு!

தொட்டு வைத்த முயற்சி எல்லாம்
கெட்டு விட்ட தீனி போல
கொட்டி விட்டு புதைத்ததுண்டு!



ஏணி என்னும் தோழர்கள்
தேடி ஏமாற்றம் எனும்
சாலையில் நானும் என்னிலை
மறந்து நடந்ததுண்டு!

வழி அறிந்த குருடர் போலே
வலம் குறைந்த மனிதர்கள்
போலே சுயம் மறந்து அலைந்ததுண்டு!


இப்படியே இருந்து விட்டால்
எப்படித்தான் வாழ்வதென்ற
வினா எழவும் விதியது நேரம்
ஒதுக்கியது விழித்தெழுந்தேன்!

கடந்து வந்த பாதையெல்லாம்
முட்கள் கொய்தேன் அதன் முனை
உடைத்து பதம் செய்தேன்
அடுத்தவர் அறிவுறையை கொஞ்சம்
எடுத்து ஓரம் வைத்தேன்!


எனது புத்தியை உயிர்ப்பித்தேன்
காலம் தந்த வடுக்களை சேமித்தேன்
முனை உடைத்த முட்களுடன்
கலந்து பாதை ஒன்றைச் செப்பனிட்டேன்!

நடந்த போது சற்றே சறுக்கியதுதான்
விரைந்த போதும் கொஞ்சம்
குடைந்து ஒரு வலி கண்டதுதான்
மயங்கவில்லை
தயங்கவில்லை
எழுந்து நடக்கிறேன் எனது புதிய பாதையில் துணையாக எனது வெற்றிகள்!

நான் விழுந்த இடமெல்லாம்
விதைத்த முட்கள் இன்று எழுந்து
பூத்தூவுது!

                                 க.ஷியா
                                 இலங்கை.



தேர்தல்


அடுத்தடுத்து வந்தாலும்
அடுக்கடுக்காய்
அழுக்கு விளைவுகளே
தொடுத்து வரும்!

எடுத்தெடுத்து
போட்டாலும் எதுவும்
எமக்கென்று
நினையாதே!

இலித்துச் சிரித்து
அழைத்தாலும் இருக்கும்
கசடு மனசோடு!

அடித்த மையும் கொடுத்த
வாக்கும் அடுத்து சில
நிமிடங்களே!

வீதிகள் விழாக்காணும்
இருள்களும் சமாதி
போகும் இலுக்கு கூரை
மினுங்கும் தகடாக!

இடுப்பு வேட்டி இரும்பு வாளி
அடிபம்பு குடத்துக் கோர்வை
பட்டாவும் பரிவாரமும் இன்னும்
சில காட்சிகளும்!

ஒலி பெருக்கி வாய் சத்தமாகும்
தெரு பெருக்கி சுத்தமாகும்!

மேடைக்கு மேதை கூட்டம்
ஓடைக்குள் மூடர் கூட்டம்
நாளைக்கும் விடிவு இல்லை!

வாக்குகள் வேண்டும் என்று
வாக்கினை ஓடையில்
எழுதி விடுவர் ஜெய்த்ததும்
கரைந்திடும் காலமும் மறைத்திடும்!

ஆசனம் அமரும் முன்னே
பாறையில் ஆறு ஓடும்
குருதியில் குளியல்
காணும்!

பொது மகன் உடமையில்
தீப்பிடிக்கும் பொழுதுகள்
புகைகளில் ஒழிக்கப்படும்!

பதவிக்காய் சத்தியம்
சாகடிக்கப்படும்
பார்வையில் தேன் ஊறும்!

யாரோ ஒருவனாய்
இருப்பான்
ஊரில் உள்ள உன்னை
எல்லாம்
தத்தெடுப்பான்!

ஊற்றி வைத்த தாரை
எல்லாம் வாக்கெடுப்பு
முடியும் முன்னே
வண்டி ஓடி தேய்த்து
வைப்பான்!

ஆளுக்கொரு அமைச்சு
வரும் ஆயிரம் தலைமை
தோன்றும் ஆனாலும் ஆபத்தில்
பல தெய்வ வழிபாடு போல்
பரிதவித்து மக்கள் நிற்பர்!

ஏனடா மானிடா......
யாரடா உண்மையாளன்
அப்படியும் ஒருவன் வந்தால்
அவன் நெற்றியையோ
நெஞ்சினையோ தோட்டாக்கள்
துளைக்கும்!

என்னதான் வழி .......!!!!!
இப்படியே வழி இன்றி
வரி கொடுத்தே வறுகி
விட்டால் மறு தலை முறை
மண்டியிடும்!

மறுபடியும் தேர்தல் வரும்
தகட்டுக் கூரை ஓடாய் மாறும்
பாறையில் நதி ஓடும்
குருதியில் குழியில் காணும்
மீண்டும் ஓர் சமூகம் நினைவு
கூறும்!
                       ஷியா.