ஷியாவின் கவிதைகள்
Tuesday, October 29, 2019
புறவழியால் நுழைகிறார்கள்
என் அழகான அடுக்கல்களை
யாரோ கலைத்துப் போட்டிருக்க
வேண்டும்........
நான் வரிசைப் படுத்திய
வாசகங்களில் யாரோ
எதையெதையோ கலந்திருக்
வேண்டும்......
என் அடுக்கல்களின் இருப்பிடம்
தனித்துவத்தை இழக்கிறது
அங்கு பொருள் பட்டும் படாமல்
ஏதேதோ குவிகிறது......
நான் ஒதுக்கி விலக்கிப்
பார்க்கிறேன் யாரோ நான் இல்லாத
நேரங்களில் அனுமதியின்றி
புறவழியாக நுழைகிறார்கள்
போலும்.......
என் வரிசைகளின் வரைவிலக்கணம்
சில பிதற்றல்களால் நிரப்பப்படுகிறது
உங்கள் இடங்களில் வரைந்து
கிழித்துப் போடுங்கள்
என் அமைவிடத்தின் அமைதியைப்
பறிக்காதீர்கள்.......
இது நிம்மதியைத் தேடி எழும்
கோட்டை..........
Sunday, October 27, 2019
இறைவா_கருணை_காட்டு
மழையே சற்று ஓய்வெடு
எங்கள் செல்லத் தாரகையான்
பூமித்தாயின் மடிக்குள்
சுருண்டிருக்கிறான்......
அவன் மூவிரு தினங்களாக
கண்விழிக்க வழியின்றி கரும் இருளில்
கலங்கிக் கொண்டிருக்கிறான்......
நானும் மழை ஓய வந்து ஈ என்று
போகும் வெயிலை போல்
நொடிக்கொரு முறை அந்த
அழகோவியம் மீண்டு
விட்டதா என ஏங்கிக் கொண்டே
எட்டிப் பார்க்கிறேன்......
இன்னும் இன்னும் போராட்டமே
பதிலாகிறது பொய்களும்
பதிவாகிறது.....
என் வீட்டு முற்றத்தில் உள்ள
அடி கிணறு அவனையே
நினைவூட்டுகிறது .....
மழையே நீ ஓய்வெடு
உன் வருகை அதிகமானால்
பூமித்தாய்கு குளிர்ந்து உடல்
நடுங்கிடலாம்.......
செல்ல மகன் சுஜீத்திற்கும்
வலித்திடலாம்.......
எழுதி என்ன பயன் என்று
ஏங்கயிருந்தேன்
மழையே...... என்னையும்
எழுத வைக்கிறாய் கண்கள்
அழுத வண்ணம்......
அன்னையவள் கதறும் ஓசை
கன்னம் வலித்து
வெடிக்கிறது இதயம்......
கருணை
காட்டு என் இறைவா......
மண்ணறை கூட ஆறடிதான்
எங்கள் செல்ல மகனுக்கோ
நூறடிக்கு மேல் உயிர்த்திருக்க
பூமிக்குள் இடம் தந்தாய்......
இறைவா அவன் மீண்டெழும் வரை
அவன் இருப்பிடத்தை விசாலமாக்கு
அவன் பசிக்கு உணவளி......
அவனுக்கு அவன் தாய் போல் நீயே காட்சி
கொடு........
துணையிருந்து மீட்டுக் கொடு
என் இறைவா அந்த அரும் மொட்டை
மழையே நீயும் அவனுக்காக அழுகிறாயோ
கொஞ்சம் நிறுத்திக் கொள்...
பூமித்தாயின் மடியில்
அந்த பூந்தளிர் புகுந்து கிடக்கிறான்.....
க.ஷியா
Monday, July 29, 2019
மறுமணம்_தேடி_மணவாளன்
அவர்கள் அப்படி என்ன
நியாயவாதிகளா
சிறு குறைகளை சிரசில்
ஏற்றி அறிமுகம் செய்துவிட்டு
அடுத்த பாதையில்
அமைதியாக பயணிக்க!
முட்கள் மோதும் போதும்
கதிரவன் ஆக்கிரமிக்கும் போதும்
கால்கள் சற்றே தளரும் போதும்!
காற்று வீச மறுக்கும் போதும்
மூச்சு கொஞ்சம் துடிக்கத் திணறும்
போதும் அவர்கள் குணம்
கடுகளவேனும் உணரப்படாததா!?
அவர்கள் மட்டும் நல்லவர்களா
குறைகளை கூவி ஏலம் விட்டு
குலப் பெண்ணை குற்றவாளியாக்கி
மணப் பெண்ணை மடியாக்கி
மூலையில் ஒதுங்கி விட்டு
மறு மணம் தேடி புறப்படும் அவர்கள்
நல்லவர்களாக!?
அனுசரிக்க மறந்த அறிவாளிகளுக்கு
புது மணம்தான் முடிவுரையா
அடி சறுக்க ஆணுக்கு விதியில்லையா!?
ஆசை ஆசையாய் மணந்து கொண்டு
ஆண்மையை பெண்மையை
அழகாய் மலரவிட்டு அன்பினில்
உயிர் விதைத்து அங்ஙனம் அதை இரசித்து வாழ்ந்தவர்களே!
உப்பில்லா உபசரிப்பில் தப்பெல்லாம்
கோர்த்தெடுத்து ஒன்றும் இல்லா ஒன்றுக்கு ஊரெல்லாம் கூவி அழைத்து
தப்பில்லா மனிதர் போல் வெட்டியே
போவதுதான் அழகென்பர் அதுவே
இன்று நாகரீகம் என்பர்!
அறுத்தெறிந்து பிரித்தெடுத்து
அவளையே தவிக்க விட்டு மறுமுனையில் மாலை சூடும் மகான்களே!
உங்களால் உங்களுக்கு நீதி சொல்ல
முடியுமா நீங்கள் எல்லாம் உத்தமர்
தானா!
சத்திய வேதம் சான்றாக
சகதியில்தான் சரிவீரா
உன்னத மறுமை உமக்காய்
காத்திருக்க ஒன்றும் இல்லா உலகில் தான் தற்பெருமை கொள்வீரா!
மறுமணம் ஆணுக்கு இனிதாக
பெண்ணு விமர்சனச் சாலையில் நடை
பவனியா உங்கள் கடுஞ்சொற்கள்
அதில் வரவேற்புரையா!?
நியாயங்கள் நீர் பூத்த நீறாக
பெண் எனும் பெரும் பொருள்
இன்றும் விமர்சன விடியாச்சிறையில்!
க.ஷியா
கடிதம் தந்த கண்ணீர்
எத்தனை முறை குத்திக்
கிழித்தாலும் என்னைச் சுற்றியே
கிடக்கும் சதைத் துண்டுகள்
என்னை தேற்ற வளர்ந்து
கொண்டுதான்
இருக்கிறது!
அலை மோதும் எதோ ஓர் நியாபகம்
மட்டும் அவ்வப்போது வந்து இனமறியாது வலித்து விட்டுப்
போகிறது!
ஆனாலும் காதலில் வீழ்வதில்லை
என்ற ஆணவம் கருவுற்றிருக்கிறது
என் மனக்கிடங்கில்
அதையே தொடர்ந்து அதுவான
எனக்கு காதலை ஆராதிக்கும்
பழக்கமற்றுப் போனது!
காலங்கள் என்னை
அலங்கரித்தது நானும் அணிந்து
கொண்டேன் பல போர்வைகளை!
ஓவ்வொரு போர்வைக்குள்ளும்
ஓவ்வொரு அனுபவம்
நான் காதலைக்
கண்டதுண்டு கொண்டதில்லை ஆதலால் அது மட்டும் கிடைக்கவில்லை!
திருமணக் கனவுகளை தினசரி
பேசும் என் முற்றம் அக்கோலத்தைக்
கூடத் தந்தது அணிந்து பார்த்தேன்
அவ்வலங்காரம் எனக்கென ஆனதல்ல
அவரவர்க்குத் தானே அந்தந்த அலங்காரங்கள்!
என் அனுபவப் போர்வைகள் சற்று
சாயம் போகத்துடங்கின
அதன் முதல் நூல் வரை வெளுத்தே
கலங்கின!
போர்வைகளை களைய துடித்தேன்
இது மட்டும் சற்று சதை குடைந்து
இதயத்தைக் கிள்ளியது
இதயமும் கொஞ்சம் கிளிஞ்சல் ஆனது!
முட்டி மோதி முக்குளித்து எழுந்து
நிற்க முனைகிறேன் முடியாது
போகிறது ஆறுதல் தேடி யாரிடமும்
போகத் தெரியாத எனக்கு!
பள்ளியறை தந்த நினைவுகள்
வந்து என் காயத்தில் சதையாகி
சுவர் மூடுகிறது அவன் என்னைச்
சேர முட்டி மோதி தட்டுண்டு போன
நியாபகமாய்!
கொந்தெளும் குருதி மட்டும்
வெளிவர வழியின்றி எனக்குள்
அணை உடைக்க ஆயத்தமானது
ஆனாலும் தடுப்புகள் பலமானது!
செய்வதறியாது துடிப்பது ஒன்றும்
எனக்கு புதிதல்ல செருகிய ஓலை
போல் மூலையில் ஓய்ந்து கிடந்தேன்!
அப்போது அங்ஙனம் எனைத் தழுவியது
அவன் காகிதம் காதலை அறியாத
எனக்கு காவியமானது அதுவே
காதலும் தந்தது!
ஓர்தலைக்காதலன் அவன்
ஓராயிரம் கனவுகளை வரைந்து வைத்திருந்தான் என்னோடாக!
கை நழுவிய பேரின்பம்
கை தழுவையில் நான் தான் புதைந்து
கிடக்கிறேனே வஞ்சனைச் சிறையில்
வாழ்ந்திருக்கிறது எனக்கான காதல்
வாழ மறுத்து விட்டேன்
உணரத் தொடர்கையில் நானே
கை நழுவி நின்றேன்!
க.ஷியா
என் கணக்கு இன்னும் நிலுவையில்
ஓடுகிறேன் ஓடுகிறேன்
ஒரு நொடியேனும் ஓய்ந்திடாது
ஓடுகிறேன் ஒன்றையும் எண்ணாது
ஓட்டத்தில் மட்டும் நிலை கொள்கிறேன்!
என் சுற்றத்தார் என் பக்கத்தார்
எவருக்கும் விடை கொடாது விழிப்பின்றி
ஓடுகிறேன்!
வாலிபம் கடந்திடும் முன்னே
நான் யாரென நிறுவிட ஓடுகிறேன்
வயதுக்கு வயது மாற்றம் கொண்டு
தரும் சுகங்களை மறந்து ஓடுகிறேன்!
அன்றொரு நாள் நான்யென்னும்
எனக்கு முகவரி கேட்டது பல முகங்கள்
அன்றிலிருந்து நான் என்பதை யாரென்று
உணர ஓடுகிறேன் நான்தான் நான் உணரவில்லை!
என்னில் இந்த வாழ்க்கை
தோரணை
கட்டி அலங்கரித்த உறவெனும் பூக்கள்
ஒவ்வொன்றாய்ப் பூத்து நின்றது
விழியோடு வாங்கி வளியோடு நிறுத்தி
விட்டு ஓடுகிறேன்!
ஓடித்தான் தேய்கிறேன் தேய்தல்
கொஞ்சம் தேகம் தின்றது வலிமை கொஞ்சம் தள்ளி நின்றது!
சில நாட்களுக்கு முன்பு என் ஓட்டத்தில்
ஓர் சோர்வு வந்தது ஒதுங்கச் சொன்னது
ஓட்டம் அப்போதும் அடங்க மறுத்தது மனம்!
கண்களில் ஏதோ கூசல்கள் பாதைகள்
ஒவ்வொன்றும் இரண்டு மூன்றாய்
பிரிந்து வெளிப்படுகிறது நான் எழுந்து
நடக்க எப்படி!?
இன்று என் கால்களை கேலி செய்கிறது
என் மனம் ஓடிக்களைத்தாயா என்று
அப்போது என் மகவெனும் உறவு என் கால்களுக்கு காலாகிறது!
என் கால்களில் இன்னொரு கால் இணையும் போதுதான் காலம் எனை வென்று கடந்ததை உணர்ந்தேன்
அதில் நான் வைத்த வெற்றிடம் அறிந்தேன்!
மனைவியின் பாசம் மக்களின் நேசம்
பெற்றவர் பேரன்பு சுற்றத்தார் அனுசரிப்பு இவை எல்லாம் வெறும் சொத்துக்காய் இழந்தேன் என்று!
சொத்துக்கள் என்று பல பத்திரங்களை
அடுக்கி வைத்தேன் சொந்தளை பத்திரப் படுத்த மறந்தேன் அப்பத்திரங்கள் அங்கேயே இருக்கிறது
பந்தங்கள் இன்று என் காலாக என்னுடன் நிற்கிறது!
நான் அடைக்க மறந்த அன்புக்கணக்கு
இன்னும் நிலுவையில் நிற்கிறது
விதி விடை தர வருகிறது!
கொஞ்சம் ஓய்வெடுங்களேன்
சில நாட்களாக எனக்குள்
ஒரு வகை வலி
நிற்கவோ நடக்கவோ ஏன் வலியால்
வலிதாங்காது துடிக்கவோ
இயலாத இயலாமை!
என் உடலின் பாகங்களை
எலிகள் கூடி அவ்வப்போது
நறும்புவதாய் ஓர் உணர்வு
என் முதுகுப் பாகத்தில்
ஏதோ ஓர் பாரம் வந்தமர்ந்த
சோகம்!
பல தருணங்களில் என் சுவாசக் குழாயில் யாரோ நுணி விரலால்
மூடுவது போல் ஒரு திணறல்!
மாத்திரைகள் ஆகாரம் ஆகிறது
மருந்துகள் குடிபாணமாகிறது
மனதும் கொஞ்சம் மயங்கியே
சோர்கிறது!
மருத்துவமனை உறவாகிறது
மருத்துவர்கள் கூடி
உபசரிக்கின்றனர் அங்கு கசப்பு
உணவுகள் வாய் வழியும்
கடுத்து வலிக்கும் பாணங்கள்
உடல் வழியும் என்று பரிமாறப்படுகிறது
வலிப்பசியாற!
முயன்று முயன்று மீளாது முடிவில்
மருந்துகளுக்கு அடிமையாகினேன்
மருந்துகள் கூட போதைப் பொருள் போல் மணியானதும் அருந்தச் சொல்லி
அலரமடிக்கிறது உணர்வு!
நாடித்துடிப்புகளுக்கு நல்லதொரு
காவலாளி நாளுக்கு பலமுறை
வந்து கவனிக்கிறார்
நான் துடிக்கிறேன் அதனால் தான்!
கால்கள் அதீத ஆர்ப்பாட்டம்
செய்கிறது கத்தி முனையால்
சிறிதாய் ஓர் யுத்தம் செய்ய வேண்டுமாம் சில நிமிட நீடிப்பில்!
உயிருடன் ஒரு சபதம் அப்போது
நீ ஊர்கையில் உடலில் ஓர் இடத்தில் மட்டும் சில நொடிகள் உனை நிறுத்தி வைப்போம் என்று!
வெட்டி எறிந்த சதைத் துண்டுகளின்
சாபமாய் இருக்குமோ என்னவோ
விறைப்பை வென்று வலிகள்
குடி கொள்ளுவது!
ஓய்வுக்கு கூட ஒதுங்க இயலாத
நோவின் முண்டியடிப்பு
பல பக்குவங்களை கற்றுத் தந்தாலும்
கண்ணீரே பந்தயம் போட்டு ஜெய்க்கிறது!
என் உயிரின் நுன்னுயிர்கள்
என்னுடன் விளையாடியதன்
விளைவா இது அப்படியானால்
அவர்களுக்கு என் பணிவான
படிவம் ஒன்று
கொஞ்சம் ஓய்வெடுங்களேன்
நுண்ணுயிர்களே என் மென்னுடல்
வலிக்கிறது!
இந்த நேயவளின் நோய் தாளா
விண்ணப்பம் இது!
Sunday, April 28, 2019
கல்லறையில் ஒரு முறை
என்னவென்று எண்ணிப் பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை என்று
இதயமே இடிந்து போகிறது
இருப்பினும் சில இதயங்கள் கண்டு
வியர்ந்து போகிறேன்!
பட்டிலே உடுத்து பகட்டிலே வாழ்ந்தவர்
கல்லறை கண்டேன்
பட்டினியால் கிடந்து கந்தையைக்
கசக்கிக் கட்டியோர் கல்லறையும்
கண்டேன்!
பூமியில் பூசிய வாசனை என்ன
பொறுமையில் பொருத்திய
தீப் பொறி என்ன பார்வையில் எரித்திடும் கோபங்கள் என்ன
அத்தனையும் ஆறடிக் குழிக்குள்ளே
அவஸ்தையில் திணறுதல் கண்டேன்!
நிமிர்ந்த நடையில் பரந்த திமிறும்
பசித்த வயிறை மறந்த மனமும்
தொழுகை தன்னை வெறுத்த மனுவும்
இடிந்த குழியில் இருப்பதைக் கண்டேன்!
பதவி என்னும் பொறுப்பைக் கொண்டு
நல்லவை கெட்டவை அளந்த கைகள்
அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து கிடப்பதைக்
கண்டேன்!
கொடையினை கொடுக்க மறந்து
கோமளத்தில் சாவியைத் தொங்க
விட்டு கோபுரத் தட்டினில் நின்று குடிசையின் உடைசல் கண்டு
மகிழ்தோரும் அங்குதான் வாழக் கண்டேன்!
மனிதனில் தரம் பிரித்து பந்தியை
சந்தில் வைத்து பாகு பாடு கொண்டு
வாழ்ந்த பணக்கார பதறுகளும்
அங்குதான் அடங்கக் கண்டேன்!
ஏனடா மானிடா ஏகனை மறந்திட்டாய்
எம்புவி எமதல்ல இருப்பினும்
எகத்தாளமாய் வாழ்ந்தவர் ஏழையாய்
வாழ்ந்தவர் எல்லாம் சமாதியில் சமமடா
ஆன்மாவை அவன் கரம் பற்ற அடுத்தவர் உடல் புதைத்த இடத்தில் உறங்குவோர் நிலை கண்டு மாறாதோ உன் மனம்!
க. ஷியா
என்னால் முடியவில்லை என்று
இதயமே இடிந்து போகிறது
இருப்பினும் சில இதயங்கள் கண்டு
வியர்ந்து போகிறேன்!
பட்டிலே உடுத்து பகட்டிலே வாழ்ந்தவர்
கல்லறை கண்டேன்
பட்டினியால் கிடந்து கந்தையைக்
கசக்கிக் கட்டியோர் கல்லறையும்
கண்டேன்!
பூமியில் பூசிய வாசனை என்ன
பொறுமையில் பொருத்திய
தீப் பொறி என்ன பார்வையில் எரித்திடும் கோபங்கள் என்ன
அத்தனையும் ஆறடிக் குழிக்குள்ளே
அவஸ்தையில் திணறுதல் கண்டேன்!
நிமிர்ந்த நடையில் பரந்த திமிறும்
பசித்த வயிறை மறந்த மனமும்
தொழுகை தன்னை வெறுத்த மனுவும்
இடிந்த குழியில் இருப்பதைக் கண்டேன்!
பதவி என்னும் பொறுப்பைக் கொண்டு
நல்லவை கெட்டவை அளந்த கைகள்
அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து கிடப்பதைக்
கண்டேன்!
கொடையினை கொடுக்க மறந்து
கோமளத்தில் சாவியைத் தொங்க
விட்டு கோபுரத் தட்டினில் நின்று குடிசையின் உடைசல் கண்டு
மகிழ்தோரும் அங்குதான் வாழக் கண்டேன்!
மனிதனில் தரம் பிரித்து பந்தியை
சந்தில் வைத்து பாகு பாடு கொண்டு
வாழ்ந்த பணக்கார பதறுகளும்
அங்குதான் அடங்கக் கண்டேன்!
ஏனடா மானிடா ஏகனை மறந்திட்டாய்
எம்புவி எமதல்ல இருப்பினும்
எகத்தாளமாய் வாழ்ந்தவர் ஏழையாய்
வாழ்ந்தவர் எல்லாம் சமாதியில் சமமடா
ஆன்மாவை அவன் கரம் பற்ற அடுத்தவர் உடல் புதைத்த இடத்தில் உறங்குவோர் நிலை கண்டு மாறாதோ உன் மனம்!
க. ஷியா
Subscribe to:
Posts (Atom)