அவர்கள் அப்படி என்ன
நியாயவாதிகளா
சிறு குறைகளை சிரசில்
ஏற்றி அறிமுகம் செய்துவிட்டு
அடுத்த பாதையில்
அமைதியாக பயணிக்க!
முட்கள் மோதும் போதும்
கதிரவன் ஆக்கிரமிக்கும் போதும்
கால்கள் சற்றே தளரும் போதும்!
காற்று வீச மறுக்கும் போதும்
மூச்சு கொஞ்சம் துடிக்கத் திணறும்
போதும் அவர்கள் குணம்
கடுகளவேனும் உணரப்படாததா!?
அவர்கள் மட்டும் நல்லவர்களா
குறைகளை கூவி ஏலம் விட்டு
குலப் பெண்ணை குற்றவாளியாக்கி
மணப் பெண்ணை மடியாக்கி
மூலையில் ஒதுங்கி விட்டு
மறு மணம் தேடி புறப்படும் அவர்கள்
நல்லவர்களாக!?
அனுசரிக்க மறந்த அறிவாளிகளுக்கு
புது மணம்தான் முடிவுரையா
அடி சறுக்க ஆணுக்கு விதியில்லையா!?
ஆசை ஆசையாய் மணந்து கொண்டு
ஆண்மையை பெண்மையை
அழகாய் மலரவிட்டு அன்பினில்
உயிர் விதைத்து அங்ஙனம் அதை இரசித்து வாழ்ந்தவர்களே!
உப்பில்லா உபசரிப்பில் தப்பெல்லாம்
கோர்த்தெடுத்து ஒன்றும் இல்லா ஒன்றுக்கு ஊரெல்லாம் கூவி அழைத்து
தப்பில்லா மனிதர் போல் வெட்டியே
போவதுதான் அழகென்பர் அதுவே
இன்று நாகரீகம் என்பர்!
அறுத்தெறிந்து பிரித்தெடுத்து
அவளையே தவிக்க விட்டு மறுமுனையில் மாலை சூடும் மகான்களே!
உங்களால் உங்களுக்கு நீதி சொல்ல
முடியுமா நீங்கள் எல்லாம் உத்தமர்
தானா!
சத்திய வேதம் சான்றாக
சகதியில்தான் சரிவீரா
உன்னத மறுமை உமக்காய்
காத்திருக்க ஒன்றும் இல்லா உலகில் தான் தற்பெருமை கொள்வீரா!
மறுமணம் ஆணுக்கு இனிதாக
பெண்ணு விமர்சனச் சாலையில் நடை
பவனியா உங்கள் கடுஞ்சொற்கள்
அதில் வரவேற்புரையா!?
நியாயங்கள் நீர் பூத்த நீறாக
பெண் எனும் பெரும் பொருள்
இன்றும் விமர்சன விடியாச்சிறையில்!
க.ஷியா